உயர்கல்வி மற்றும் பல்கலைகளில், கல்வி
வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் கூறினார்.
திருச்சி
பாரதிதாசன் பல்கலையில், கடந்த, 1986-ம் கல்வியாண்டில் எம்.எஸ்சி.,
கணிதத்துடன் கூடிய கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, நான்கு பெண்கள் உட்பட, 17
மாணவர்கள் பயின்றனர். பாரதிதாசன் பல்கலையில் முதன்முறையாக துவக்கப்பட்ட,
கணிதத்துடன் கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, இவர்கள் மட்டுமே
பயின்றனர்.
அதன்பின், எம்.எஸ்சி., கணிதமும், கம்யூட்டர்
சயின்ஸ் பாடமும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இந்தாண்டு படித்த மாணவர்கள்
சந்திப்பு விழா நேற்று, திருச்சியில் நடந்தது.
விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்
ஆலோசகரும், முன்னாள் மாணவருமான பொன்ராஜ் பங்கேற்று கூறியதாவது:
இந்தியாவில், 12வது ஐந்தாண்டுத் திட்டத்துக்காக, நான்கு லட்சம் கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், உயர்கல்வி மற்றும் பல்கலையில், கல்வி வளர்ச்சி
மற்றும் ஆராய்ச்சிக்காக, 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இத்தொகையில், 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தும் அளவுக்கு கூட
பல்கலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை.
நிறைய பல்கலைகள் இந்நிதியை பயன்படுத்தாததால், அரசு கஜானாவுக்கே திரும்பச்
சென்று விடுகிறது.
இந்நிலையை மாற்றி இத்தொகை முழுவதும் பயனுள்ள
வகையில் செலவழிக்க, பல்கலைகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில்
உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை, 12 சதவீதம். வரும் 2050ம் ஆண்டில் தான்,
இது 50 சதவீதமாக உயரும். 2020ம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோர்
எண்ணிக்கையை, 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு
ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைகள்,
இந்தியாவில் ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கும். இதனால், இந்தியாவில்
உள்ள பல்கலை கடுமையான போட்டியை சமாளிக்கும் நிலை ஏற்படும். உலகத்தரம்
வாய்ந்த பல்கலைகளுடன் போட்டி போடும் வகையில், இந்திய பல்கலைகள் தரத்தை
உயர்த்திக் கொள்ள வேண்டும்.
வரும், 2015ம் ஆண்டுக்குள் தனித்திறன் தகுதி
வாய்ந்த, 26 கோடி இளைஞர்கள் தேவைபடுகின்றனர். பல்கலைகள் தகுதி வாய்ந்த
மாணவர்களை உருவாக்க வேண்டும். மாணவர்களை ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்கவிக்க
வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.