Pages

Wednesday, July 11, 2012

ஆசிரியர் பட்டயப் படிப்பில் 15,000 இடங்கள் காலி

ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டின்கீழ், 17 ஆயிரம் இடங்கள் இருந்தும், வெறும், 1,998 பேர் மட்டுமே, இந்த பயிற்சியில் சேர்ந்தனர்.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு வேலை வாய்ப்பு இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த படிப்பில் சேர்வோர் எண்ணிக்கை, சரிந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடந்தது.

மாநிலம் முழுவதும் இருந்து, 3,864 பேர் விண்ணப்பித்தனர். தகுதி வாய்ந்த 3,843 மாணவருக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும், 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கவுன்சிலிங்கிற்கு வந்தும், 1,998 மாணவர் மட்டுமே, பயிற்சியில் சேர உத்தரவு பெற்றனர்.
இவர்களில், மாணவர் எண்ணிக்கை, வெறும் 200 பேர் தான். மீதமுள்ள அனைவரும், மாணவியர். ஆசிரியர் பயிற்சி முடித்தால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், இந்த பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு, எளிதில் திருமண வாய்ப்பு கை கூடுவதும் தான், மாணவியர் அதிகளவில் இப்பயிற்சியை பெறக் காரணம் என, துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலேயே, 2,720 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கூட நிரம்பாதது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை, கவலை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த பயிற்சிக்கு வரவேற்பு குறைந்து, வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், ஆசிரியர் பயிற்சி படிப்பு, சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே போன்ற ஒரு நிலை, வரும் காலங்களில் ஏற்படும் என தெரிகிறது.
கவுன்சிலிங்கில் 17 ஆயிரம் இடங்கள் இருந்தும், 11.75 சதவீத இடங்கள் தான் நிரம்பியுள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், 50 பள்ளிகள் மூடப்பட்டன. இது, வரும் காலங்களில் தொடரலாம்.
இந்தப் பள்ளிகளில், பி.எட்., கல்லூரி உள்ளிட்ட, வேறு கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு, தனியார் ஆர்வம் காட்டுகின்றனர். ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, மவுசு குறைந்து வருவதால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.