Pages

Thursday, June 21, 2012

ஆட்டம், பாட்டம் இன்றி இணையதளம் வழியில் கவுன்சிலிங் : SCERT அசத்தல்

பணியிட மாறுதல், பதவி உயர்வு, "கவுன்சிலிங்' என்றாலே, பெரிய ஏற்பாடுகளும், அதிகாரிகள் வருவதும், போவதுமாக ஒரே பரபரப்பு போன்ற காட்சிகள் கல்வித்துறையில் தென்படும். இதற்கு மாறாக, சத்தமே இல்லாமல், காசை கரியாக்காமல், இணையதளம் மூலம் அமைதியாக நேற்று முதுநிலை விரிவுரையாளர் பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை நடத்தியது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர்களில், 33 பேருக்கு, முதுநிலை விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 75 முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிட பட்டியல், எஸ்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

பட்டியல்: பதவி உயர்வு பட்டியலில் உள்ள 33 பேரிடமும், வரிசையாக தாங்கள் விரும்பும் 5 இடங்களை குறிப்பிட்டு, இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று காலை 33 பேரும், தலா 5 இடங்களை, குறிப்பிட்டு பதிவு செய்தனர். இது முடிந்ததும், பணிமூப்பு முடிப்படையில், வரிசையாக ஒவ்வொரும், தாங்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, ஒவ்வொருவராக, தாங்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்தனர். அனைத்துப் பணிகளும், ஒரு மணி நேரத்திற்குள் முடிந்தன. சென்னையில், தலைமையிடத்தில் இருந்தபடி, அனைத்துப் பணிகளையும், எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தேவராஜன் பார்வையிட்டார்.

பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்து முடித்ததும், இதற்கான உத்தரவுகளும் இணையதளம் வழியாக பிறப்பிக்கப்பட்டன. ஒவ்வொருவரும், அவர்களுக்கான உத்தரவை, "டவுன்-லோட்' செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பேப்பர் இல்லாமல், போக்குவரத்து செலவு இல்லாமல், டீ, காபி, சாப்பாடு போன்ற எந்தச் செலவும் இல்லாமல், ஒரு மணி நேரத்தில் இணையதளம் வழியாக, அமைதியாக, பதவி உயர்வு, "கவுன்சிலிங்"கை நடத்தி முடித்த விவகாரம், கல்வித்துறையில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, இயக்குனர் தேவராஜன் கூறும்போது, ""வழக்கமாக, அனைவரையும் சென்னைக்கு அழைத்து, "கவுன்சிலிங்' நடத்தி, உத்தரவுகள் வழங்கப்படும். இதனால், வீணாக போக்குவரத்துச் செலவு உட்பட பல்வேறு செலவுகள் ஏற்பட்டு வந்தது. ஆசிரியர்களின் பணிகளும் பாதிக்கப்பட்டது. தற்போது, எந்த பாதிப்பும் இல்லாமல், செலவுகளும் இல்லாமல் பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை நடத்தியுள்ளோம்'' என்றார்.

மற்ற துறைகளும் கடைபிடிக்குமா?
இதேபோன்ற நடைமுறையை, தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகள் கடைபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான, "கவுன்சிலிங்'கை, இணையதளம் வழியாக நடத்துவது சாத்தியமில்லை எனவும், இதனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வரும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.