Pages

Saturday, June 16, 2012

பள்ளிக்கல்வி - பதவிஉயர்வு - அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.
எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.