Pages

Tuesday, June 19, 2012

தகுதிக் குறைவான பொறியியல் கல்லூரிகள் மீதான நடவடிக்கை எப்போது?

அடிப்படை வசதிகள் இல்லாத, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காத, 72 பொறியியல் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு, இவ்வார இறுதிக்குள் வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, தகுதியான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனரா என, ஏ.ஐ.சி.டி.இ.,யால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய குழு, சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், 72 கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை விட கூடுதலாக மாணவர்களை சேர்த்திருப்பது போன்றவற்றை குழு கண்டறிந்தது.

இதையடுத்து, 72 கல்லூரிகளுக்கும் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப் பட்டன. இதற்கு, கல்லூரி நிர்வாகத் தரப்பில், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு பதில் அனுப்பப்பட்டுள்ளன. இதை ஆய்வு செய்த ஏ.ஐ.சி.டி.இ., கல்லூரி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன்பேரில், வசதிகள் இல்லாத, கூடுதல் இடங்களை நிரப்பிய கல்லூரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., இறுதி முடிவை எடுத்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, இந்த வாரத்திற்குள் வெளியாகலாம் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகளில், 22 கல்லூரிகள், நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ளது. குறிப்பாக, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. மீதமுள்ள, 50 கல்லூரிகளில், நான்கு கல்லூரிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. இந்த கல்லூரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரி துவங்கும்போதே, அதிகமான மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப, உள் கட்டமைப்பு வசதிகளை யாரும் செய்ய மாட்டார்கள். முதல் ஆண்டிற்கு தகுந்தாற்போல், தேவையான கட்டமைப்பு வசதிகள் மட்டும் இருக்கும். இரண்டாம் ஆண்டில், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதற்கேற்ப கூடுதல் கட்டட வசதிகள், கூடுதலான ஆசிரியர்கள் இதர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இப்படி, கூடுதல் பாடப் பிரிவுகள், கூடுதலான மாணவர் சேர்க்கை நடக்கும்போது, அதற்கேற்ப கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால், பல கல்லூரிகள் அப்படி செய்வதில்லை. இப்படிப்பட்ட கல்லூரிகளுக்குத் தான் நோட்டீஸ் அனுப்பினோம்.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும், 400 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவற்றின் மீதான நடவடிக்கை குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும். தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 14 புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் குறித்த விவரம், விரைவில் வெளியாகும்.
மேலும், எம்.பி.ஏ., - டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளை நடத்தும், 36 கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.