Pages

Monday, June 18, 2012

ராகிங் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து கல்லூரிகளிலும், ராகிங்கை தடுக்கும் வகையில், புகார் பெட்டி அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு உயர்கல்வித் துறை அமைப்புக்கும், தமிழக டி.ஜி.பி., தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பியுள்ளார்.
நடப்பு கல்வியாண்டில், கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளிலும், ராகிங்கை தடுக்க, புகார் பெட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, கல்லூரிகளில் எக்காரணம் கொண்டும், ராகிங், கேலி, கிண்டல் உள்ளிட்ட எவ்வித செயல்பாடுகளாலும், மாணவ, மாணவியர் பாதிக்கப்படக் கூடாது. இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வரின் அறை முன், புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும்.
கல்லூரி முதல்வர் தலைமையில், ராகிங் தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்து, இப்புகார் பெட்டியில் மாணவ, மாணவியர் ரகசியமாக சேர்க்கும் கடிதங்களின் மீது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசாரின் உதவியையும் முதல்வர் கேட்டுப் பெறலாம்.
மேலும், பேராசிரியர் தலைமையிலான, கண்காணிப்புக் குழு அமைத்து, கல்லூரியில், ராகிங் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ராகிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது, போலீஸ் புகார் அளிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் கூறுகையில், புகார் பெட்டியை முறையாக பராமரிக்காமல் இருக்கும் முதல்வர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை எச்சரிக்கை செய்துள்ளதால், அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.
இது முதலாமாண்டு மாணவ, மாணவியர் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களுக்கு தயக்கத்தை உடைத்து, துணிவையும் இப்புகார் பெட்டிகள் வழங்கியுள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.