Pages

Sunday, June 3, 2012

பொது நுழைவுத்தேர்வுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு...

ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு ஒரே பொது நுழைவுத்தேர்வை கொண்டுவரும் திட்டத்திற்கு, எதிர்ப்பு வலுத்துவருகிறது.
ஐ.ஐ.டி., பழைய மாணவர்கள், இந்த முடிவிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளனர். ஐ.ஐ.டி - கான்பூரை சேர்ந்த ஆசிரியர்கள், இந்த புதிய திட்டத்தை எதிர்க்கும் பொருட்டு, தங்கள் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவுசெய்துள்ளனர். மேலும், ஆசிரியர் சங்கங்கள், இதுதொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளன.

இம்முடிவை எதிர்த்து, ஒரு வாரத்திற்குள், பொதுநல வழக்கை தாக்கல் செய்ய, ஐ.ஐ.டி பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் முடிவெடுத்துள்ளனர். மேலும், ஐ.ஐ.டி பழைய மாணவர்கள் சார்பாக, நாட்டின் பல ஐகோர்ட்டுகளில் பொதுநல வழக்குகள் விரைவில் தாக்கலாக உள்ளன. மேலும், பழைய மாணவர்களைப் பொறுத்தவரை, இந்த பொது நுழைவுத்தேர்வை, 2014ம் ஆண்டு ஒத்திவைக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.
மேலும், இத்தகையதொரு புதிய முடிவை அறிவிப்பதற்கு முன்பாக, ஐ.ஐ.டி ஆசிரியர்களை கலந்தாலோசிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுபவை எவையெனில், 12ம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எடுத்த முடிவு மற்றும் என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி -களுடன் சேர்த்து, ஐ.ஐ.டி -களையும் தரப்படுத்துவது போன்றவைதான். இதன்மூலம், உலகப் புகழ்பெற்ற ஐ.ஐ.டி -கள் சாதாரண நிலைக்கு இழுத்து வரப்படும் என்று அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரச்சினை தொடர்பாக, மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறுவதாவது: இந்த சிக்கல் நீதிமன்றத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். கடந்த 2 வருட காலமாக, பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக, விரிவான கலந்துரையாடலை அமைச்சகம் நடத்தி வருகிறது. அதன்மூலம், பலரது கவலைகளை தீர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போதைய நிலையில், ஐ.ஐ.டி -களால், 5 முதல் 6 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த முடியும். ஆனால், பொது நுழைவுத்தேர்வு திட்டத்தின் மூலம், அந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயரும். அதேசமயம், அந்த பொது நுழைவுத்தேர்வை நடத்தும் ஏஜென்சியை வழிநடத்தும் அதிகாரம் ஐ.ஐ.டி -களுக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.