Pages

Sunday, May 13, 2012

பி.இ., எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவர்களிடையே எழுந்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க மே 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்ப விநியோகத்துக்கான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை (மே 13) வெளியிடுகிறது. எம்.பி.பி.எஸ்.-பிடிஎஸ் விண்ணப்பத்தைப் பெறுவதற்கு வரும் மே 30-ம் தேதி கடைசி நாளாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 22-ம் தேதி வெளியிடப்படுகின்றன. முதன்முறையாக பிளஸ் 2 மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ், தேர்வு முடிவு வெளியிடப்பட்டு ஒரு வாரம் கழித்து அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது மே 29-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்துத்தான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கும் கால அவகாசம் குறைவாக இருக்கும் என்பதால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  மாணவர்கள் நலன் கருதி... இது குறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ""பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அளிக்கும் தேதியைப் பொருத்து, மாணவர்கள் நலன் கருதி பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கும் தேதி நீட்டிக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.