Pages

Saturday, May 5, 2012

குரூப் 4 தேர்வு: நிரந்தரப் பதிவில் இருந்து விலக்கு.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நிரந்தரப் பதிவு அவசியமில்லை, அந்தப் பதிவு இல்லாமலேயே நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, தேர்வாணையத்தில் ஏற்கெனவே நிரந்தரப் பதிவினை பெற்று இருப்பது அவசியம். நிரந்தரப் பதிவின் மூலம் பெறப்பட்ட அடையாள எண் மற்றும் கடவுச் சொல் ஆகியன ஐந்தாண்டு காலத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் மனு செய்து வருகின்றனர். அவர்கள் நிரந்தரப் பதிவை மேற்கொண்டு, அதன்பின் தேர்வுக்கும் விண்ணப்பிப்பது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால் எளிய நடைமுறையை தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அனைத்தும் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தனியாக நிரந்தரப் பதிவை மேற்கொள்ள வேண்டாம். குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தினை இணையவழியில் பதிவு செய்தவுடன் கிடைத்திடும் பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லையே நிரந்தரப் பதிவுக்கான நிரந்தர அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லாக ஏற்றுக் கொள்ளப்படும். இது ஐந்தாண்டு காலத்துக்குச் செல்லும்.
பதிவு செய்தவர்கள்: நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஏனெனில் நிரந்தரப் பதிவு முறையில் விண்ணப்பதாரர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் புகைப்படம், கையொப்பம் ஆகியன மட்டுமே பெறப்படுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் கல்வித் தகுதி, தொழில்நுட்ப கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியன மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே, நிரந்தரப் பதிவு, எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகக் கருதப்பட மாட்டாது. எனவே, நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.