Pages

Tuesday, May 8, 2012

ஜூலை 2ம் தேதி மருத்துவக் கல்வி கலந்தாய்வு.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவின் செயலர், விரைவில் நியமிக்கப்படுவார் என, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறினார்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலராக இருந்த ஷீலா கிரேஸ் ஜீவமணி, கடந்த மார்ச் 31ம் தேதி, பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியரான சித்ரா, இப்பொறுப்பை வகித்து வருகிறார்.
ஒரிரு நாளில்...: எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் வினியோகம் விரைவில் துவங்க உள்ள நிலையில், செயலர் பணியிடத்தை நிரப்ப வேண்டி உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறும் போது, "அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக பணிபுரிவோரை, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலராக நியமிக்க வேண்டும். இதற்கான பரிந்துரைப் பட்டியல், அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. ஓரிரு நாளில், செயலர் பணி நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்படும்,'' என்றார்.
ஜூலை 2ல் கலந்தாய்வு: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள், வரும் 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.
வரும் 30ம் தேதி, மாலை 3 மணி வரை, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். இணையதளம் மூலமும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவரிசை பட்டியல்: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதி, மாலை 5 மணிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான சுழற்சி எண், ஜூன் 15ம் தேதியும்; மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், ஜூன் 20ம் தேதியும் வெளியிடப்படும்.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. அகில இந்திய அளவிலான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுற்றபின், இதற்கான அறிவிப்பு, இணையதளத்தில் வெளியிடப்படும். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.