கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா, இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:
கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகளில் ரெகுலர் பாடப்பிரிவுகளில் குறைந்த கல்விக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
ஆனால் சுயநிதி பாடப்பிரிவுகள் என்ற பெயரால் வணிகம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு ரூ. 20 ஆயிரம், ரூ. 30 ஆயிரம் என அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
அரசிடம் இருந்து மானியத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு பக்கம் சாதாரண கட்டணம், மறுபக்கம் சுயநிதி பாடப்பிரிவுகள் என அதிகக் கட்டணம் வசூலிப்பது சரி அல்ல.
சுயநிதி கல்லூரிகள் இதைவிட மோசமாக உள்ளன. எனவே, பொறியியல் கல்லூரிகளைப் போன்று அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.
அமைச்சர் பழனியப்பன்: கட்டணக் கொள்ளை தமிழ்நாட்டில் இல்லை. புகார்களும் வரவில்லை. அப்படி புகார் வந்தால் அந்தக் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு இதுபோன்ற புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 104 கல்லூரிகள் மீது புகார்கள் பெறப்பட்டன. 75 கல்லூரிகளில் அந்தக் குழு ஆய்வு செய்தபோது 24 கல்லூரிகளில் கட்டண உயர்வு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
கே. பாலபாரதி: அரசு கல்லூரிகளிலும், அரசு மானியம் பெறக்கூடிய கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: கட்டண உயர்வைக் கண்காணிப்பதற்கு எப்படி ஒரு குழு உள்ளதோ, அதேபோல் அரசுக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அமலாவதையும், சிறுபான்மை கல்லூரிகளில் 50 விழுக்காடு ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில் குழு ஒன்று செயல்படுகிறது. அந்தக் குழு இதுபோன்ற புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.