Pages

Thursday, April 12, 2012

செம்மொழி தமிழ் முதுகலை பட்டப் படிப்பு துவக்கம்.


செம்மொழி மத்திய நிறுவனமும், திருவாரூர் மத்திய பல்கலைக் கழகமும் இணைந்து, நடப்பு ஆண்டு முதல், எம்.ஏ., செம்மொழி தமிழ் பட்டப் படிப்பை துவக்குகின்றன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, இரு நிறுவனங்களும் நிறைவேற்றின.

செம்மொழி மத்திய நிறுவனம் துவக்கப்பட்ட பின், தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதன்முறையாக, முதுகலை பட்டப் படிப்பை, திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைந்து துவக்கி உள்ளது.
செம்மொழி மத்திய நிறுவன பதிவாளர் மு.முத்துவேலு, இது குறித்து கூறியதாவது:நடப்பு கல்வியாண்டு முதல், எம்.ஏ., செம்மொழி தமிழ் என்ற முதுகலைப் பட்டப்படிப்பை துவக்குகிறோம். பி.ஏ., பி.லிட்., இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த முதுகலை பட்டப் படிப்புக்கு தகுதியானவர்கள்.
ஆண்டுக்கு, 20 மாணவர்கள், எம்.ஏ., செம்மொழி தமிழ் பிரிவில் சேர்க்கப்படுவர். மாணவர்கள் சேர்கைக்காக, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அடுத்த மாதத்தில் இத்தேர்வு நடக்கும். திருவாரூர் மத்திய பல்கலையில், வகுப்புகள் நடைபெறும்.
இரண்டு ஆண்டுகள் கொண்ட எம்.ஏ., செம்மொழி தமிழ் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு, மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். எம்.ஏ., பிரிவு, ஜூலை முதல் துவக்கப்படும். இதுதவிர, ஆண்டுக்கு 5,000 ரூபாய், இதர செலவுகளுக்காக அளிக்கப்படும். இவ்வாறு மு.முத்துவேலு கூறினார்.
எம்.ஏ., செம்மொழி தமிழ் பட்டப் படிப்புக்கு, செம்மொழி மத்திய நிறுவனம், பாடத் திட்டங்களை தயார் செய்துள்ளது. தமிழ் செம்மொழி, செம்மொழி இலக்கியம், உலக செம்மொழிகள் மற்றும் இந்திய மொழிகளைக் கொண்டதாக, பாடத் திட்டம் இருக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.