Pages

Monday, April 23, 2012

10-ம் வகுப்பு கணிதத் தேர்வு: குழப்பமான கேள்விக்கு மதிப்பெண் கிடைக்குமா?

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் மாணவர்களைக் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
  தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 87 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். நேரடித் தனித் தேர்வர்கள் 19,574 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
  ஏப்ரல் 16-ம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. இதில், பிரிவு 1-ல் மூன்றாவதாக இடம்பெற்றிருந்த கேள்வி மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
  கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது? என்ற கேள்வியும், அதற்கு 4 பதில்களும் அளிக்கப்பட்டுள்ளன.
  தமிழ்வழி கேள்வித்தாளென்றால் "ஈ' விடை சரியானது. ஆங்கில வழியென்றால் "d'  விடை சரியானது. ஆனால், "அ' (a) விடையும் சரியானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. "அ' விடையில் {aj} என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக {aij}  என குறிப்பிடப்பட்டுள்ளதால், "அ' விடையும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  பெரும்பாலான மாணவர்கள் "ஈ' விடைக்குப் பதிலாக "அ' விடையையே குறிப்பிட்டிருப்பார்கள் எனத் தெரிகிறது. ஆனால், சரியான விடை "ஈ' தான். அச்சுப் பிழையால் ஏற்பட்ட தவறால் இரு விடைகளும் சரிதான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
  எனவே, இந்த வினாவைத் தேர்வு செய்து எந்த விடையளித்திருந்தாலும் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
  இதுகுறித்து, பென்னாகரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிக் கணித ஆசிரியை தீபா கூறியது:
  கணித வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் 3-வது கேள்வி தெளிவாக இல்லை. வழக்கமாக இதுபோன்ற கேள்விக்கு மாணவர்கள் எந்த விடை அளித்திருந்தாலும் அல்லது கேள்வி எண்ணை விடைத்தாளில் எழுதியிருந்தால்கூட மதிப்பெண் வழங்கப்படும்.
  ஏப்ரல் 25-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. அப்போதுதான் கணித வினாத்தாளில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கான விடை கிடைக்கும் என்றார்.
  இதுகுறித்து, அரசுப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் எஸ்.சதீஷ்குமார் கூறியது: ஏற்கெனவே கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் இந்த ஆண்டு 100-க்கு 100 எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்ற நிலையுள்ளது. எனவே, குழப்பமான இக்கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.