Pages

Friday, April 27, 2012

10-ம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் 26 முதல் விற்பனை.

பத்தாம் வகுப்பு புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 26) முதல் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.70. ஒரு செட்டின் விலை ரூ.350 ஆகும்.
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வியாழக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ளனர்.

 அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக, 9-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
 தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத் தலைமை அலுவலகத்திலும், 22 வட்டார அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.
 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலர்களுடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
 மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் அந்தந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஒதுக்கும் நாள் மற்றும் நேரத்தில் பாடநூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
 சென்னையில்...: சென்னையில் அதிக அளவில் மெட்ரிக் பள்ளிகள் உள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் எந்தவித காலதாமதமும் இல்லாமல் உடனடியாகப் பாடநூல்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 ஒரு பகுதியிலுள்ள ஒரு சில பள்ளிகள் ஒருங்கிணைந்து பாடநூல் கிடங்கிலிருந்து பாடநூல்களை ஏதேனும் ஒரு பள்ளிக்கு எடுத்துச் சென்று இதரப் பள்ளிகளுக்குப் பிரித்து வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
 இதற்காக சனி, ஞாயிறு (ஏப்ரல் 28, 29) ஆகிய இரு நாள்களிலும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.
 வரைவோலையாகச் செலுத்த வேண்டும்: புத்தகங்களைத் தொகுப்பாகவோ, தனித்தனியாகவோ பெற்றுக்கொள்ளலாம். பாடநூல்களுக்கான தொகையை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வரைவோலையாக அளிக்க வேண்டும்.
 இந்த வரைவோலை 5 சதவீத தள்ளுபடி போக அந்தந்த ஊரில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.
 10-ம் வகுப்பு பாடநூல்கள் அனைத்தும், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் போதுமான அளவு அச்சிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.