Pages

Friday, March 30, 2012

ஆசிரியையை தாக்கிய டிஎஸ்பி விடுப்பில் சென்றார்.


தர்மபுரி : தர்மபுரியில் ஆசிரியர்களை டிஎஸ்பி தாக்கிய சம்பவம் தொடர்பாக சாலை மறியல் நடந்த இடத்தில் டிஐஜி விசாரணை நடத்தினார். தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப விநியோகத்தில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி மறியலில் ஈடுபட்டவர்களில் ஆசிரியையும், பட்டதாரியையும் டிஎஸ்பி சந்தனபாண்டியன் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் என்று பாராமல் நடுரோட்டில் தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நடந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி சந்தனபாண்டியனிடம் எஸ்.பி அமீத்குமார் சிங் விளக்கம் கேட்டார். அவரது விளக்க அறிக்கை உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. 
சென்னை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சந்தனபாண்டியனிடம் விசாரணை நடந்து வருகிறது. ஏடிஎஸ்பி சரவணன் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே சேலம் சரக டிஐஜி சஞ்சய்குமார் நேற்று தர்மபுரிக்கு வந்தார். ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். பின் தர்மபுரி எஸ்பி அலுவலகத்துக்கு வந்த அவர், சம்பவம் தொடர்பாக ஏடிஎஸ்பி சரவணனிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து எஸ்.பி அமீத்குமார் சிங் கூறுகையில், ‘‘பட்டதாரிகளை டிஎஸ்பி தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி சரவணன் விசாரணை நடத்தி வருகிறார். அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யு மாறு அறிவுறுத்தியுள்ளோம். இந்த அறிக்கையின்படி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்றார்.
இந்நிலையில், டிஎஸ்பி சந்தன பாண்டியன் 3 நாள் விடுமுறையில் சென்றுள்ளார். 

அவர் குடும்ப காரணங்களுக்காக விடுமுறை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை: சாலை மறியலின் போது தாக்கப்பட்ட அரூர் செல்லம்பட்டியை சேர்ந்த ஆசிரியை ஜீவா கூறுகையில், ‘‘சாலை மறியல் நடந்தபோது எனது கணவர் மது அருந்தி இருந்ததாகவும், அவர் தரக்குறைவாக பேசினார் என்றும் தவறான தகவலை போலீசார் கூறுகின்றனர். எனது பெற்றோர்கூட என்னை தாக்கியதில்லை. டிஎஸ்பி சந்தனபாண்டியன், ஆசிரியை என்றும், பெண் என்றும் பாராமல் என்னை இழிவுபடுத்தியுள்ளார். எங்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.