Pages

Tuesday, March 27, 2012

பத்தாம் வகுப்பு வரையில் இனி நோட்டுப் புத்தகங்கள் இலவசம்!

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளில், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இருந்து, இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அரசு இலவசமாக வழங்குகிறது. 2012-13ம் நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 14,552 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது மற்ற அனைத்து துறைகளுக்கும் கிடைத்துள்ள ஒதுக்கீட்டை விட அதிகம்.
பட்ஜெட் அறிவிப்புகள்
* ஆறு வயது முதல், 14 வயதிற்குட்பட்ட அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, 100 சதவீத பள்ளி சேர்க்கை அளவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 2,000 கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதில், மாநில அரசின் பங்காக, 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
* ஆறாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில், முழுக்கால் சட்டை (பேன்ட்), மாணவிகளுக்கு சல்வார் கமீஸ் வழங்கப்படும். 48.63 லட்சம் மாணவர்களுக்கு இந்த சீருடைகளை வழங்க, 329.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச செருப்புகள் வழங்கப்படும். இதற்காக, வரும் கல்வியாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 81 லட்சம் குழந்தைகள் பயனடைவர்.
* ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள், ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வண்ணப் பென்சில்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு உலக வரைபட புத்தகம் ஆகியவை வழங்கப்படும். இதற்காக, 136.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* மாணவர்களுக்கு விலையில்லாமல் அனைத்துமே வழங்கிய நிலையில், எஞ்சியிருப்பது நோட்டுப் புத்தகங்கள் மட்டும்தான். அதையும், வரும் கல்வியாண்டு முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
செருப்பு ஒரு ஜோடி!
இலவச செருப்புத் திட்டம் குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: நூறு ரூபாய் முதல், 120 ரூபாய் விலையுள்ள செருப்புகள், மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும், ஆண்டுக்கு ஒரு ஜோடி செருப்பு வழங்கப்படும்.
காற்று புகும் வகையில், மாணவர்கள் எளிதாக கழற்றி, மாட்டும் வகையில், ஒட்டும் வகையில் இருக்கும்.

மாணவர்களுக்கு செருப்பு வழங்கும் திட்டம் குறித்தும், மாணவர்களின் கால்களை எப்படி அளவு எடுக்க வேண்டும் என்பது குறித்தும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.